ஓம் சரணவனபவ யூடியூப் சேனல் வாயிலாக ஆன்மிக கருத்துகளை ஆன்மிகவாதிகள் பலர் பேசி வருகின்றனர், அந்த வகையில், விதியை மாற்ற முடியுமா? என்பதைப் பற்றி ‘கந்தர்வ நாடி’ ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன் தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
என்னைப் பார்க்க வருபவர்கள் பரிகாரம் உண்மையா? விதியை மாற்ற முடியாதா? என்று கேட்பார்கள். விதியை மாற்ற முடியவில்லை என்றால் பரிகாரம் அர்த்தமற்றதாக போய்விடும். அதனால் இப்போது பரிகாரம் சொல்பவர்கள் தவறாகச் சித்தரிக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். திருவள்ளுவர் எழுதிய ஒரு குறளில் விதியை ஜெயிக்க முடியாது என்று எழுதியுள்ளார். இன்னொரு குறளில் முயற்சி செய்தால் “ஊழையும் உப்பக்கம் காண்பர்” என எழுதியிருக்கிறார். அதனால், எல்லா காலத்திலும் பரிகாரம் மற்றும் விதியின் மேல் நம்பிக்கை இருந்திருக்கிறது.
விதியை மாற்ற முடியுமா? அல்லது பரிகாரம் செய்வதன் மூலம் தப்பித்துக்கொள்ள முடியுமா? என்று கேட்டால் மழை பெய்வது விதி. அதிலிருந்து தப்பிக்க குடை எடுத்துச் செல்வதுதான் பரிகாரம். தலைக்கவசம் அணிந்துகொண்டிருந்தாலும் சில நேரம் விபத்து நடக்கும். ஆனால், பாதிப்பு குறைவாக இருக்கும். அதுபோல பரிகாரம் செய்வதன் மூலம் விதியால் ஏற்படக் கூடிய பாதிப்பை குறைக்க முடியும். பரிகாரத்தின் உண்மையான பொருள் இதுதான். பரிகாரம் செய்வது உங்களைக் காப்பாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு கவசம்.
விஞ்ஞானம் சொல்வதுபோல் எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. அதைத்தான் வினைப் பயன் என்கிறோம். ஒரு தவறு செய்தால் அதற்கான அபராதம் அல்லது தண்டனை கிடைக்கும். பரிகாரம் என்பது தண்டனை பெறாமல் இருப்பதற்கான அபராதம் என்று சொல்லலாம். பரிகாரம் செய்யும்போது, நாம் அபராத காணிக்கையை செய்துவிடுவதால் தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். பணம் இழப்பது வேறு, தணடனை வேறு. பணம் இழப்பதால் பணம் மட்டும்தான் போகிறது. ஆனால், தண்டனை வரும்போது மனமும் பாதிக்கப்படுகிறது. அதனால் பிரச்சனைக்கேற்ற பரிகாரத்தைச் செய்வதன் மூலம் நிம்மதியடையலாம்.
இந்த உலகத்தில் பிறப்பதே நாம் கடந்த பிறவியில் கொடுத்த பலனை வசூல் செய்வதற்கும் பட்ட கடனை அடைப்பதற்கும் தான். எந்தவிதமான வினையும் இல்லையென்றால் நீங்கள் இந்த உலகத்தில் பிறக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு வங்கியில் கடன் வாங்கியிருந்தால் அந்த வங்கிக்குச் செல்ல வேண்டும். அல்லது சேமிப்பு இருந்தால் அந்த வங்கிக்குச் செல்ல வேண்டும். வங்கியில் சேமிப்பும் இல்லாமல் கடனும் இல்லாமல் இருந்தால் வங்கிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இதுதான் உலகிற்கும் உங்களுக்கும் உண்டான தொடர்பு. இதனால்தான் மனிதனிதர்கள் தங்கள் செய்த நல்ல மற்றும் கெட்ட விஷயங்களுக்கு இந்த உலகத்தில் அனுபவித்து வருகிறார்கள். தீய செயல்களால் மனிதர்கள் உலகத்தில் அனுபவித்து வரும் பாதிப்பை சரியான பரிகாரங்கள் செய்வதன் மூலம் பாதிப்பை குறைக்க முடியும். விதி அதனுடைய வேலையைச் செய்யும். அதைப் பரிகாரங்கள் தடுக்கும் என்றார்.