'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பேச்சாளரும் இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "காலையில் குளிர்காற்று வீசுகிறது. அந்த வீசுகிற காற்றை அனுபவித்துக் கொண்டு, இரண்டு கரங்களையும் ஒட்டி, உரசி அதைக் கன்னத்தில் தேய்த்துக் கொள்ளுகிற பொழுது ஒரு கதகதப்பு வந்து பற்றிக் கொள்ளுகிறது. இந்த மார்கழி திங்களில், இந்த இயற்கையின் விளையாட்டை நாம் அனுபவிக்கிற பொழுது ஒரு புத்துணர்ச்சியும் பூரிப்பும் கிடைக்கிறது. இந்த மார்கழி திங்களில்தான் திருவெம்பாவையை எந்த நாளில் எழுதினார்? திருவாதிரை திருநாளில். ஆண்டாள் திருப்பாவையை எழுதியதைப் போல மாணிக்கவாசகர் திருவெம்பாவையை எழுதினார்.
அது மட்டுமல்ல, நகர மறுக்கிறது தேர். அப்பொழுது ஒருவர் பல்லாண்டு பாடுகிறார். நகர மறுத்த தேர் பல்லாண்டு பாடிய உடனே, புறப்பட்டு போயிற்று. அப்படி பல்லாண்டு பாடியவர் யார் என்றால், 64 நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படக் கூடிய சேந்தனார். சேந்தனார் பல்லாண்டு பாடி நகர முடியாத, ஓட மறுத்த தேரை ஓட்டினார். ஆகவே, ஒருவரை வாழ்த்தினால்; ஒருவரைக் கொண்டாடினால் அறமும், காற்றும் நமக்கு கவடி வீசும் என்பதற்கு சேந்தனார் தான் உதாரணம்.
திருவாதிரை திருநாள் மார்கழியில் தான் வருகிறது. அது சிவபெருமானுடைய நட்சத்திரம். இந்த 63 நாயன்மார்களில் ஒருவரான சேந்தனார். மணிமுடி தரித்த மன்னனாக இருந்தார். சிவபெருமான் திருவிளையாடலில் மணிமுடியை இழந்தார். மன்னன் என்று சொல்லக் கூடிய அந்த அரச பீடத்தை அவர் துறந்து வறுமையில் வாடினார்; ஏழ்மையில் சிக்கினார். ஆனால், அவர் வாழ்நாள் முழுவதும் ஒரு நெறியைக் கைப்பற்றி வந்தார்.
என்னவென்றால், ஒரு சிவனடியாருக்கு அமுது ஊட்டாமல் அவர் அன்னம் உண்பதில்லை என்பது, அவரது வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டு வந்த விரதம். அன்றைக்கு வறுமை நிலைக்கு வந்து ஏழ்மையில் சிக்கியிருந்த நிலையில் அடியவருக்குச் சோறு போட வேண்டும் என்கிற அவருடைய அறத்தை அவர் எப்போதும் நிலைநாட்டாமல் இருந்தது இல்லை. ஒரு நாள் விண்ணைக் குடைந்து கூ.. கூ.. என்று காற்று வீசுகிறது; மத்தளம் கொட்டுகிறது காற்று; கொட்டி முழக்குகிறது வானம்; வெட்டி முறிக்கிறது மின்னல். சட்ட சடாரென்று மழை பொழிந்து கொண்டிருக்கிறது.
ஒரு அடியவரும் அன்றைக்கு வரவில்லை. அடியவர் வந்தாலும் அமுதம் செய்வதற்கு அவரது வீட்டில் எதுவும் இல்லை. ஆனால், அமுதம் செய்தாக வேண்டும். அடியவருக்கு அன்னம் பாலிக்க வேண்டும் என்று, என்ன செய்வது? கோலம் போடுவதற்கு வைத்திருந்த பச்சரிசி மாவை எடுத்தார். கொஞ்சம் வெல்லம் கலந்தார். அதை அடுப்பில் வைத்து காய்ச்சி களியாக்கினார். அந்த களி தான் அன்றைக்கு அவர் செய்திருக்கிற அமுது அன்னம். அதை அருந்துவதற்கு அடியார் வரமாட்டாரா என்று காத்துக் காத்து இருந்தார். அந்த களியைத் தின்பதற்கு யாரும் வரவில்லை. மிகுந்த கவலையோடு உறங்க சென்றார்.
அவர் உறங்கச் சென்ற பொழுது பிச்சை.. பிச்சை.. என்று ஒரு யாசகர் வந்து பிச்சைக் கேட்டார். பிச்சை.. பிச்சை.. என்று சத்தம் வருகிறதே என்று வெளியில் வந்து பார்த்தால் எல்லாவல்ல சிவபெருமானே ஒரு பிச்சைக்காரர் வேடத்தில் வந்து நிற்கிறார். அவனுக்கு அந்த களியைக் கொடுக்கிறார். அந்த களியை சிவபெருமான் சாப்பிடுகிறான். சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறதே; ருசியாக இருக்கிறதே; இன்னும் இருந்தால் கொஞ்சம் கொடேன் என்று சொல்லி இருந்த களியையும் சிவபெருமான் வாங்கிக் கொண்டு போய்விட்டான்". இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.