Skip to main content

பரிகாரத்திற்கு பூஜைகள் அவசியமா? - ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன் விளக்கம்

Published on 05/12/2024 | Edited on 05/12/2024
Astrologer Lalgudi Gopalakrishnan's explanation -1

ஓம் சரணவனபவ யூடியூப் சேனல் வாயிலாக ஆன்மிக கருத்துகளை ஆன்மிகவாதிகள் பலர் பேசி வருகின்றனர், அந்த வகையில் பரிகாரத்திற்கு பூஜைகள் அவசியமா? என்பதைப் பற்றி  ‘கந்தர்வ நாடி’ ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன் தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.

ஒருவருடைய பிரச்சனைக்குத் தீர்வு காண்பதுதான் பரிகாரம். ஜோதிடத்தில் கிரக நிலைகள் சரியாக அமையாதபோது பரிகாரங்கள் தேவைப்படுகிறது. நோயுற்றவர்களுக்குத்தான் மருந்து தேவைப்படும் அதுபோல ஒருவருக்கு ஏதோ ஒரு விஷயத்தில் கிரக நிலைகள் அனுகூலமாக இல்லையென்றால் அவருக்குப் பரிகாரம் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள்தான் செய்ய வேண்டும். அவருக்குப் பதிலாக மற்றவர்கள் பரிகாரம் செய்தால் அது பயன் தராது. இப்போது நிறைய இடங்களில் மற்றவர்கள் பரிகாரம் செய்வது நடந்து வருகிறது. யாருக்குப் பசி இருக்கிறதோ அவர்கள் சாப்பிட்டால்தான் சரியாக இருக்கும்.

உடற்பயிற்சி கூடத்தில் ஒருவர் பணம் கட்டிவிட்டு அவருக்குப் பதிலாக வேறொருவர் பயிற்சி செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் பணம் கொடுத்தவர் உடல்நிலை எப்படி வலிமை அடையும். அதனால் ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் செய்யும் பரிகாரத்தால் எந்தவிதமான பயனும் கிடையாது. ஒருவேளை உங்களுக்குப் பதிலாக மற்றவரை பரிகாரம் செய்யச் சொன்னால் அது வியாபாரமாகத்தான் இருக்கும். கடவுளை நேரடியாகச் சென்று வணங்கினால்தான் பலன் கிடைக்கும். இடைத்தரகர்கள் மூலம் கடவுளை வேண்டிக்கொள்வது பலன் தராது. எல்லோரும் கடவுளின் குழந்தைகள்தான். அதனால் கடவுளை நேரடியாக அணுகி பிரச்சனைக்கான நிவாரணம் பெறுவதற்கு உரிமை உண்டு. எனவே மற்றவர்கள் மூலம் பரிகாரம் பெற வேண்டிய அவசியம் கிடையாது.

கர்ம பலனை கரைக்கக்கூடிய சக்தி கண்ணீருக்கு மட்டுமே உண்டு. நீங்கள் செய்யும் தவறுக்கு வருந்தி திருந்தினாலே அது பரிகாரமாக அமையும். அதைச் செய்யாமல் ஆடம்பரமான பூஜைகள் மற்றும் ஹோமங்கள் செய்வதன் மூலம் எந்தவித பலனும் கிடைக்காது. ஆன்மீகத்தை ஓரளவிற்கு பகுத்தறிவு ரீதியில் அணுகினால்தான் பலன் கிடைக்கும். அதைவிட்டுவிட்டு யாரோ சொன்னார்கள் என்பதற்காக பெரிய பூஜைகளைச் செய்தால் கடவுளை மகிழ்ச்சியடைய வைக்கவும் முடியாது, அவரிடம் ஆதரவும் தேடவும் முடியாது. ஏனென்றால் கடவுள் தனிப்பட்ட நபர் மீது விருப்பு, வெறுப்பு இல்லாதவராக எல்லோருக்கும் சமமானவராக இருக்கிறார். அதனால் நீங்கள் செய்த தவறுகளை நினைத்து மனதார  கடவுளை வேண்டி வருந்தினால்போதும் அதுதான் சிறந்த பரிகாரம்.  ஏழை, பணக்காரர், முக்கியமானவர் என்ற பாகுபாட்டை கடவுள் பார்க்கமாட்டார். அதனால் உங்களுக்கு பிரச்சனைகள் வந்தால் நேரடியாக கடவுளிடம் முறையிடலாம். இதைச் செய்யாமல் ஆடம்பர பரிகாரங்கள் செய்வதன் மூலம் எந்த பயனும் இல்லை என்றார்.