அச்சலேஸ்வர் மகாதேவ் மந்திர் என்கிற இந்த ஆலயம் ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்குப் பகுதியில், சிரோகி மாவட்டத்தில், மவுன்ட் அபுவுக்கு அருகில் உள்ளது. இதுவொரு சிவாலயம். அச்சல்கர் என்னும் கோட்டைக்கு வெளியே இது அமைந்துள்ளது. 9-ஆவது நூற்றாண்டில், பரமரா வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இதைக் கட்டியிருக்கிறார்கள். அச்சல்கர் கோட்டையைக் கட்டியவர்களும் அவர்கள்தான். 1452-ஆம் வருடத்தில் மகாரானா கும்பா என்ற அரசர் இந்த ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டியிருக்கிறார்.
"அச்சல்' என்றால் "நிலையானது' என்று பொருள். சமஸ்கிருத மொழியில் இந்த சொல்லுக்கு "நகராதது' என்று பொருள். அவ்வாறு ஒரே இடத்தில் நிலைபெற்று இருக்கக்கூடியவர் இந்த ஆலயத்தில் குடியிருக்கும் சிவனான அச்சலேஸ்வர். இவர் சுயம்பு மூர்த்தி. இந்த கோவிலில் சிவபெருமானின் கால் கட்டைவிரலை சிவலிங்க வடிவத்தில் மக்கள் வழிபடுகிறார்கள். அணுவுலை குவிமாடம் போல இந்த சிவலிங்கம் காட்சியளிக்கிறது. சிவலிங்கத்திற்கு எதிரே இருக்கும் நந்தி பஞ்சலோகத்தால் செய்யப்பட்டது.
இந்த ஆலயத்தைப் பல்வேறு காலகட்டங்களில் முஸ்லிம் மன்னர்கள் தாக்க முயற்சித்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ஆலயத்தைக் காப்பாற்றுவதற்காக உண்டாக்கப் பட்டதுதான் இந்த நந்தி. இந்த கோவில் மவுன்ட் அபுவிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில், வடக்கு திசையில் அச்சல்கர் மலைச் சிகரத்தில் இருக்கிறது.
ஆலயத்திலிருக்கும் சிவலிங்கத்தில் ஒரு துளை உள்ளது. அதன்வழியாக எவ்வளவு நீரை ஊற்றினாலும் உள்ளே போய்க்கொண்டே யிருக்கும். அது எங்குபோய்ச் சேர்கிறதென்று இதுவரை யாருக்கும் தெரியாது. இந்த ஆலயத்தை "அர்த்த காசி' என்று பக்தர்கள் அழைக்கின்றனர். அதற்கு "காசியில் பாதி' என்று பொருள். ஸ்கந்த புராணத்தில் சிவனது இருப்பிடமாக காசி கூறப்படுகிறது. அவர் இருக்கும் இன்னொரு இடமாக இந்த ஆலயம் கூறப்பட்டிருக்கிறது.
இங்கிருக்கும் நந்தியின் எடை நான்கு டன். அரசர்கள் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், இந்த ஆலயத்திற்கு வந்து இங்குள்ள தராசில் அமர்ந்து, தங்களுடைய எடைக்கேற்ப கடவுளுக்கு காணிக்கை சமர்ப்பிப்பார்கள். "நாட்டின் நலனுக்காகப் பணியாற்றுவேன்' என்று சத்தியம் செய்வார்கள். இந்த ஆலயத்தில் துவாரகாதீசருக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. வராகருக்கும் சந்நிதி உள்ளது.நரசிம்மர், வாமனர், கசாபா (கூர்ம அவதாரம்), மச்சாவதாரம், ராமர், பரசுராமர், கிருஷ்ணர் ஆகிய திருவுருவச் சிலைகளும் இருக்கின்றன.
புராணகாலத்தில் நடைபெற்றதாக சொல்லப்படும் கதை இது...
மவுன்ட் அபுவில் ஒரு பள்ளத்தாக்கு.அந்தப் பகுதியில் தவம் செய்துகொண்டிருந்த வசிஷ்ட முனிவரின் பசு பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது. சரஸ்வதியையும் கங்கையையும் வேண்டிக்கொண்டார் வசிஷ்டர். அப்போது அந்த பள்ளத்தாக்கில் நீர் நிறைய, பசு மேலே வந்தது.பின்னர் மீண்டும் அதே சம்பவம் இன்னொரு நாள் நடந்தது. அப்போது வசிஷ்ட முனிவர் இமயமலையை வேண்டிக் கொள்ள, இமயமலை தன் மகன் நந்தி வரதனை அங்கு அனுப்பியது. "அற்புத நாக்' என்னும் சக்திவாய்ந்த நாகத்தின் உதவியுடன் நந்திவரதன் அங்குவந்தான்.அவன் வசிஷ்டரிடம், "சப்ரிஷிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு ஆசிரமத்தை இங்கு கட்டுங்கள். பலன்தரக் கூடிய மூலிகைச் செடிகளையும் மரங்களையும் இந்த இடத்தில் நட்டு வளரும்படி செய்யுங்கள்'' என்றான்.
அப்போது நந்திவரதனை அங்கு கொண்டு வந்த பாம்பு தன் பெயரை அந்த இடத்திற்கு வைக்கும்படி கூறியது. அதன்படி "அற்புத நாக்' என்று அந்த இடத்திற்கு பெயர் வைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் சுருங்கி "அபு' என்றானது. நந்திவரதன் உடல் பள்ளத்தாக்கில் இறங்கிக் கொண்டேயிருக்க, அவனுடைய மூக்கு பூமிக்கு மேலே இருந்திருக்கிறது. அதுதான் இப்போதிருக்கும் மவுன்ட் அபு என்னும் மலை. வசிஷ்டர் சிவனை வேண்டிக்கொள்ள, சிவபெருமான் தன் வலக்காலின் கட்டை விரலால் நந்திவரதன் கீழே செல்வதைத் தடுத்து நிறுத்தினார். அவ்வாறு அவர் தடுத்து நிறுத்திய இடம்தான் இப்போதிருக்கும் "அச்சல்'. அங்கு பின்னர் அச்சல்கர் கோட்டை கட்டப்பட்டது. "கர்' என்றால் கோட்டை.சிவனின் கட்டை விரலை வழிபட்டதால், அங்கு குடிகொண்டிருக்கும் சிவன், அச்சல்கர் மகாதேவ் என்று பெயர்பெற்றார்.
சென்னையிலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் 1,892 கிலோமீட்டர் தூரம் பயணித்து, அஹமதாபாத்தை அடைய வேண்டும். அங்கிருந்து 180 கிலோமீட்டர் தூரத்தில் அபுரோடு உள்ளது. அங்கிருந்து வாடகைக் காரிலோ பேருந்திலோ 35 கிலோ மீட்டர் பயணித்தால் கோவிலை அடையலாம். தினமும் ரயில் வசதி இருக்கிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள் அச்சலேஸ்வர் மகாதேவரின் அருளைப் பெறுவதற்காக இந்த ஆலயத்தைத் தேடிவருகின்றனர். நீங்களும் அவர்களுள் ஒருவராக இருக்கலாமே!