ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் முழு உருவ காந்தி சிலை ஒன்றை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கடந்த வெள்ளிக்கிழமை (12.11.2021) திறந்துவைத்தார்.
இந்தநிலையில், திறந்துவைக்கப்பட்ட மறுநாளே அந்த சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "இது அவமானகரமானது. இந்த அளவிற்கான அவமரியாதையைப் பார்ப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. உலகில் மிகவும் வெற்றிகரமான பன்முக கலாச்சார மற்றும் குடியேற்ற தேசமாக இருக்கும் ஒரு நாட்டில், கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான தாக்குதல்களை சகித்துக்கொள்ள முடியாது. இதற்குக் காரணமானவர்கள் ஆஸ்திரேலிய இந்திய சமூகத்தின் மீது மிகுந்த அவமரியாதை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.
சேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை, இந்திய அரசால் ஆஸ்திரேலியாவுக்கு பரிசளிக்கப்பட்டது ஆகும். நாட்டின் பிரதமர் திறந்துவைத்த காந்தி சிலை மறுநாளே சேதப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.