அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் வைகோ தாக்கப்படுவதா? கி.வீரமணி கண்டனம்
அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் வைகோ தாக்கப்படுவதா? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அருமைச் சகோதரர் வைகோ மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலைகள் குறித்தும், நீதி விசாரணை பற்றியும், அவருக்கே உரித்தான முறையில் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் முழங்கியுள்ளார்.
அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள வெறியர்கள் அவரைத் தாக்க முயற்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நிலையிலேயே பன்னாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே இப்படி சிங்கள வெறியர்கள் நடந்துகொள்கிறார்கள் என்றால், அவர்களின் மூர்க்கத்தனம் எத்தகையது என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாமே!
அய்.நா. மனித உரிமை ஆணையமும், இந்திய மத்திய அரசும் இதன்மேல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.
தாக்கப்பட்டது தனி மனிதரல்ல - மனித உரிமைக்காகக் குரல் கொடுத்த நிலையில்தான், தாக்க முயற்சிக்கப்பட்டுள்ளார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். இவ்வாறு கூறியுள்ளார்.