உக்ரைன் நாட்டில் திருமணம் செய்யவிருந்த இளைஞர்கள், இளம்பெண்கள் உள்பட பலரும் குழுவாகச் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட பயிற்சி பெறுகின்றனர். 10 பேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர் துப்பாக்கிக் கையாள்வது தொடர்பாகவும், துப்பாக்கி ஏந்திச் சண்டையிடவும், தற்காத்துக் கொள்ளவும் பயிற்சி அளித்து வருகிறார்.
அதோடு, தேவைப்படும் வேளையில் மருத்துவ முதலுதவி அளிக்கவும், அவர்களில் சிலர் பயிற்சி பெறுகின்றன. உக்ரைன் போரில் இதுவரை 112 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டு அரசு வழக்கறிஞர்கள் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடங்கிய பிப்ரவரி 24- ஆம் தேதியில் இருந்து இதுநாள் வரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 140- க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐக்கிய நாடுகள் அவையின் சிறுவர் நிதியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் போரால் உக்ரைனில் இருந்து சுமார் 15 லட்சம் குழந்தைகள் வெளியேறிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, மால்டோவா, ருமேனியா ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களும், சிறார்களும் தாங்களாகவே அண்டை நாடுகளுக்கு செல்வதாகவும், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கூறியிருக்கிறது.