Skip to main content

இதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன்... புதிய சட்டத்தை அங்கீகரிக்க மறுக்கும் ட்ரம்ப்...

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

trump rejects stimulus plans

 

அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த மசோதாவில் திருத்தும் மேற்கொள்ளுமாறு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். 

 

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில், மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண திட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு உருவாக்கியது. அதன்படி, மக்களுக்கு 900 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.66 லட்சம் கோடி) நிவாரணத்தொகையாக ஒதுக்கீடு செய்ய அந்நாட்டின் நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்தது. குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி என இரு கட்சியினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 600 டாலர்கள் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

 

இந்த மசோதா விரைவில் அதிபர் ட்ரம்ப் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. ட்ரம்ப் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாக்கப்பட்டு, மக்களுக்கான நிவாரண நிதி ஒதுக்கப்படும். இந்நிலையில், இந்த மசோதா சரியில்லை எனக்கூறி இதில் மாற்றங்களை மேற்கொள்ளச் சொல்லியுள்ளார் ட்ரம்ப். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "இந்த மசோதா முற்றிலும் தேவையற்ற அம்சங்களை கொண்டுள்ளது. கரோனாவுடன் போராடிவரும் அமெரிக்கர்களுக்கு இதனால் குறைவான உதவியே கிடைக்கும். எனவே இந்த மசோதாவில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.

 

பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கரோனா நிவாரணமாக 600 டாலர் வழங்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டிருப்பதை 2000 டாலராகவோ அல்லது 4000 டாலராகவோ அதிகரிக்கும்படி நான் நாடாளுமன்றத்தை வலியுறுத்துகிறேன். மேலும் இந்த மசோதாவில் உள்ள வீணான மற்றும் தேவையற்ற அம்சங்களை நீக்கிவிட்டு ஒரு பொருத்தமான மசோதாவை எனக்கு அனுப்பும்படி நான் நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்