பல வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும்போது முகக்கவசத்துடன் இருக்க விரும்பவில்லை என ட்ரம்ப் கூறியது சர்ச்சையாகியுள்ளது.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்த வைரஸால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 81,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், அமெரிக்க வெள்ளை மாளிகையில் மூன்று பேர் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக வெள்ளை மாளிகை ஊழியர்கள் அனைவரும் இருக்கையில் அமரும் நேரத்தைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணியும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அதிபர் ட்ரம்ப் மட்டும் முகக்கவசம் அணியப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் அனைவரிடமிருந்தும் விலகியே இருப்பதால் முகக்கவசம் அணிய தேவையில்லை. நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளை மாளிகைக்கு வருகிறார்கள், செல்கிறார்கள். நான் தினமும் பல்வேறு நாட்டு அதிபர்கள் முதல் அரசிகள் வரை பல தரப்பினரை வெள்ளை மாளிகையில் சந்திப்பேன். அப்போது என்னை யாரும் முகக்கவசத்துடன் சந்திப்பதை விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த முடிவு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிபரே பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வது மக்களுக்குச் சரியான வழிகாட்டுதலாக இருக்காது எனக் கருத்துகள் எழுந்து வருகின்றன.