ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தை மூட உத்தரவிட்ட நிலையில், அங்கு ஏற்பட்ட தீ விபத்து, ஆவணங்களை அழிப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் எழுப்பியுள்ளது.
அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும், அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்கவும் முன்னுரிமை அளிக்கும் வகையில், சர்வதேச சட்டவிதிகளை மீறி விட்டதாகக் கூறி ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை உடனடியாக மூட அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். 72 மணிநேரத்தில் இந்தத் தூதரகத்தை மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், அந்த அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய ட்ரம்ப், தூதரகத்தில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்தில், அங்கிருந்த பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தீவிபத்து தனக்கு மிகவும் ஆச்சரியம் அளிப்பதாகவும், விரைவில் அமெரிக்காவில் உள்ள மேலும் பல சீனத் தூதரகங்களை மூட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கும் ரகசியத் தகவல்களைச் சீனாவின் ஹேக்கர்கள், சீனத் தூதரகத்தின் உதவியுடன் திருடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறையும் எச்சரிக்கை விடுத்திருந்த சூழலில், தூதரகத்தை மூடும் இந்த உத்தரவை ட்ரம்ப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.