உலக அரசியல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - வடகொரிய அதிர்பர் கிம் ஜாங் உன் சந்திப்பு சிங்கப்பூரில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
இந்நிலையில், இத்தாலி நாட்டில் உள்ள வாட்டிகன் தேவாலயத்தில் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர், ’’சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் மூலம் கொரிய தீபகற்பத்தில் வாழும் மக்களுக்கும், இந்த ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பாதையை உருவாக்கி, அமைதியான எதிர்காலத்துக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்னும் எனது சிறப்பான நட்புறவின் எண்ணத்தையும், பிரார்த்தனைகளையும் கொரிய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறேன்’’என்று தெரிவித்தார்.