கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கையில் இருந்து வெளியேற மக்கள் முயன்று வருவதன் விளைவாக, பாஸ்போர்ட் விநியோகிக்கும் அலுவலகத்தில் மக்கள் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்தஆண்டு இதே காலகட்டத்தில் 91,331 பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்பட்டன. அதே, இந்தாண்டு முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 2,88,645 பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளனர். புதிய பாஸ்போர்ட்டுகளுக்கு ஒரு நாளில் மட்டும் குறைந்தபட்சம் 3,000 விண்ணப்பங்கள் வரும் நிலையில், பாஸ்போர்ட் பெற அவர்கள் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை மண்டல அலுவலகத்திலேயே காத்திருக்கிறார்கள்.
விண்ணப்பங்கள் குவிவதால், பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டு பெற மூன்று நாட்களாகக் காத்திருப்பதாக அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையில் இருந்து வந்து வரிசையில் மூன்று நாட்களாக காத்திருக்கும் 50 வயது பெண்மணி ஒருவர், குவைத்தில் வீட்டு வேலை செய்வதற்காக, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வந்ததாகக் கூறுகிறார். இவரைப் போல, தொழிலாளர்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் இலங்கையைவிட்டு வெளியேற, இரவு முழுவதும் அங்கேயே காத்திருக்கின்றனர்.
இலங்கையின் பண வீக்கம் 33% ஆக உயர்ந்துவிட்ட நிலையில், விலைவாசி உயர்வும், குடும்பத்தைப் பட்டினி போட முடியாத சூழலுமே நாட்டை விட்டு வெளியேறக் காரணம் என்கிறார்கள் இவர்கள்.