அமெரிக்காவில் நடைபெறும் கலவரங்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் ராணுவத்தை இறக்கிவிடுவேன் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவர் ஒருவரை போலீஸார் கொன்றதால் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மினசோட்டா தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் எனும் நபர் போலீஸாரின் பிடியில் உயிரிழந்தார்.
இந்த இறப்பிற்கு நீதிவேண்டி அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் போராட்டத்தைத் துவங்கினர். கடந்த ஐந்து நாட்களாக, நாடு முழுவதும் சுமார் 40 நகரங்களில் நடைபெற்று வந்த இந்தப் போராட்டங்கள் பல பகுதிகளில் கலவரமாக மாறியுள்ளன. இதனால் அந்நாடு முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பல இடங்களில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து பல மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைத்து வருகின்றார். இந்தக் கலவரங்களில் கடைகள், வாகனங்கள், கட்டிடங்கள் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், கலவரங்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் ராணுவத்தை இறக்கிவிடுவேன் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய அவர், "ஜார்ஜ் கொல்லப்பட்டதற்கு எதிராக பல்வேறு நகரங்களில் மக்கள் நடத்தும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மாநில ஆளுநர்கள் என்ன செய்கிறீர்கள். சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதில் பெரும்பாலான ஆளுநர்கள் பலவீனமாக இருக்கிறீர்கள். வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யுங்கள். பத்து ஆண்டுகள் சிறையில் அடையுங்கள். இதுவரை அவர்கள் பார்த்திராத அளவு தண்டனை வழங்குங்கள். மேயர்களும், ஆளுநர்களும் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து, மக்களின் உடைமைகளையும் உயிர்களையும் காக்காவி்ட்டால் ஆயிரக்கணக்கில் ராணுவத்தை இறக்கி சிறிது நேரத்தில் அமைதியைக் கொண்டுவந்துவிடுவேன். ஜார்ஜ் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.