மெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் அவசர நிலையை அமல்படுத்தியுள்ளார். மெக்சிகோ வழியாக அனுமதியின்றி அமெரிக்கா வருபவர்களை தடுக்கும் விதத்தில் அமெரிக்க எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்ட அதிபர் டிரம்ப் திட்டம் ஒன்றை முன்மொழிந்தார். இந்த திட்டத்திற்கான நிதியாக 40,540 கோடி தேவைப்பட்ட நிலையில், இது தொடர்பான மசோதாவிற்கு எதிர் கட்சியான ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்து ஷட்டவுன் அறிவித்தது டிரம்ப் அரசு.
இதனால் அமெரிக்காவின் ஓட்டுமொத்த அரசாங்க செயல்பாடுகளும் கடந்த இரண்டு மாத காலமாக முடங்கின. இதனால் அமெரிக்க பொருளாதாரத்துக்கு சுமார் ரூ.42,600 கோடி இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மக்கள் பயன்பாட்டிற்காக 21 நாட்கள் மட்டும் அரசாங்க துறைகள் செயல்படும் வகையில் நிதி ஒதுக்கி தற்காலிக மசோதாவிற்கு டிரம்ப் தற்போது ஒப்புதல் அளித்து, மேலும் அதற்குள் சுவர் எழுப்புவதற்கான நிதியை ஒதுக்க எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவசர நிலை அமல்படுத்தப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் சுவர் எழுப்புவதற்கான நிதி இன்னும் ஒதுக்கப்படாததால் டிரம்ப் நேற்று அவசர நிலையை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார். டிரம்ப்பின் இந்த முடிவு அமெரிக்கா முழுவதும் மிகபெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.