கனடாவிலிருந்து அமெரிக்கா வந்துள்ள ஹாரி மற்றும் மேகன் தம்பதியின் பாதுகாப்பு செலவுகளை அமெரிக்க அரசு ஏற்காது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் தம்பதி அண்மையில் அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு சர்வதேச அளவில் அரசியல்வாதிகள் மட்டும் பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் ஆகியோரின் இந்த முடிவால் அரச குடும்பம் கவலையடைந்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிக்கையும் வெளியிட்டது. இருப்பினும் அவர்களது முடிவுக்கு மதிப்பளித்து, அரச குடும்பத்திலிருந்து விலகி சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள ஒப்புக்கொண்டது.
தங்களது நேரத்தை வட அமெரிக்கா மற்றும் கனடாவில் பிரித்துச் செலவிடப் போவதாக அறிவித்த இந்த தம்பதி கனடாவில் புதிய வாழ்க்கையைத் தொடங்கினர். இதனையடுத்து, தற்போது இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். இந்நிலையில், கனடாவிலிருந்து அமெரிக்க வந்துள்ள ஹாரி மற்றும் மேகன் தம்பதியின் பாதுகாப்பு செலவுகளை அமெரிக்க அரசு ஏற்காது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நான் பிரிட்டனுக்கும், ராணிக்கும் சிறந்த நண்பன் மற்றும் அபிமானி. அரசகுடும்பத்தை விட்டு வெளியேறிய ஹாரி மற்றும் மேகன் கனடாவில் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது தற்போது அவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்கா வந்துள்ளனர். அவர்களது பாதுகாப்பிற்காக அமெரிக்கா செலவு செய்யாது. அவர்களேதான் செலவு செய்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த ட்வீட் ஒருபுறம் கடும் விமர்சனங்களையும், மறுபுறம் ஆதரவு கருத்துக்களையும் பெற்று வருகிறது.