தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும் தற்போது அரங்கேறி வருகின்றன. அதே சமயம் இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு எதிராக ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகள் தொடர்பாக இலங்கை அரசு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி பறிமுதல் செய்யப்படும் படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையொட்டி மன்னாரில் இருந்து 5 படகுகள், யாழ்ப்பாணத்தில் இருந்து 8 படகுகள் என மொத்தம் 13 படகுகள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.