அமெரிக்காவில் நடைபெறும் கருப்பின ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு ட்ரம்ப்பின் மகள் டிஃபனி ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மினசொட்டாவில் கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணை ஒன்றின் போது ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர் ஒருவர் காவலரால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஒருபுறம் போராட்டங்கள் தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், அதிபர் ட்ரம்ப், போராட்டக்காரர்களைக் கடுமையாக விமர்சித்து வருவதோடு, போராட்டத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில், இத்தொடர் போராட்டங்களுக்கு அதிபர் ட்ரம்ப்பின் இரண்டாவது மனைவியான மார்லா மேப்பிள்ஸின் மகள் டிஃபனி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் "தனியாக நம்மால் குறைவாகவே சாதிக்க முடியும்; ஆனால் நாம் ஒன்றிணைந்தால் நாம் நிறைய சாதிக்க முடியும்" என்ற ஹெலன் கெல்லரின் கருத்தை மேற்கோள்கட்டி தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் இந்தக் கருத்துக்குப் பல்வேறு தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.