தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இலங்கையில் கைது
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் மருதமுனை என்ற பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை அம்பாறை மாவட்டத்தில் உள்ள மருதமுனை அருகேயுள்ள நிண்டவூர் பகுதியில் இவர்கள் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயல்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பேரும் காவல்துறை மற்றும் கடற்படையினர் நடத்திய கூட்டுச்சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், எல்லை கடந்து வந்து உரிய அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்ததாகவும் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் 27, 36, 41 வயதுடையவர்கள் என இலங்கை கடற்படையின் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.