உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று காலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டநிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், ஏவுகணைகள் மூலமும் தொடர் தாக்குதல் நடந்து வருவதால், உக்ரைன் மக்கள் மெட்ரோ நிலையங்களில் இருக்கும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்ய தரைப்படையும் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளது.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முதல்நாள் போரில் 137 உக்ரேனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ரஷ்யாவுக்கு எதிரான போரில் தனித்துவிடப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இந்தநிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பதை கண்டித்து ரஷ்யாவில் போராட்டம் வெடித்துள்ளது.
ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள், போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். குறிப்பாக மத்திய மாஸ்கோவில் உள்ள புஷ்கின் சதுக்கத்திற்கு அருகே 2,000 பேர் கூடியும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 1,000 பேர் வரை கூடியும் உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். போர் வேண்டாம் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து ரஷ்யா முழுவதும் போருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 700-க்கும் மேற்பட்டவர்களை ரஷ்ய போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ரஷ்ய விசாரணை ஆணையம், "பதற்றமான வெளிநாட்டு அரசியல் சூழ்நிலை" தொடர்பான அனுமதியற்ற போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் வழக்குவரை தொடரப்படலாம் என எச்சரித்துள்ளது.