சீனாவில் நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க கம்பெனி அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நான்கு தளங்கள் கொண்ட இந்த அலுவலகத்தில் இன்று காலை வழக்கம்போல் பணியாளர்கள் அனைவரும் வேலை பார்த்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக அந்த கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட அந்த தளத்தில் வேலை பார்த்த சிலர் அலறி அடித்து கீழே இறங்கியுள்ளனர். ஆனால், அதில் இருந்த பலரும் அந்த தீ விபத்தில் சிக்கினர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்து மீட்பு பணியில் இறங்கினர். இந்த தீ விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சுமார் 51 பேர் காயமடைந்திருப்பதாகவும், இதுவரை மொத்தம் 63 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. காயமடைந்த அத்தனை பேரும் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, போலீஸார் இந்த தீ விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.