இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 7 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
காசாவிற்கு கொடுக்கும் பதிலடி ஹமாஸ் அமைப்பிற்கு மட்டுமல்ல, நமது எதிரிகள் கூட மறக்க முடியாத நினைவாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இஸ்ரேலின் தாக்குதலால் காசா நகரமெங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது; கட்டடங்கள் நிலைகுலைந்துள்ளன. இதனிடையே ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதாலும், ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்துவதாலும் ஜெருசலேம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் இருக்கும் வெளிநாட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நாடுகள் முடுக்கி விட்டுள்ளன.
அந்த வகையில் இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் மீட்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தது. இந்தியா வந்த 212 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் 14 பேர் சென்னை விமான நிலையம் வந்தனர். எஞ்சிய 7 பேர் டெல்லியில் இருந்து நேராக கோவை வந்தடைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அதில் கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேசியதாவது, “எனது பெயர் ராஜலெஷ்மி. பி.ஹெச்டி படிப்பிற்காக இஸ்ரேலிற்கு சென்றிருந்தேன். அங்கு இருக்கும் போது பயம் இருந்தது உண்மைதான். ஆனால், பொதுமக்களுக்கு எந்தவித பிரச்சனையும் வந்தது இல்லை. முக்கியமாக வெளிநாட்டு மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு தருகிறார்கள். அதற்கு இஸ்ரேல் அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தது. நாங்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக ஒரு அப்ளிகேஷன் இருக்கிறது. ஒரு ஏவுகணை வருகிறது என்றால், அந்த அப்ளிகேஷன் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அதை வைத்து நாங்கள் பதுங்கு குழியில் தங்கிக் கொள்வோம்.
நாங்கள் இருந்த பதுங்கு குழியே இரும்பால் சுற்றி மூடப்பட்டிருக்கும். அதனால், எந்தவித பிரச்சனையும் இருந்தது இல்லை. நிலைமை சரியானவுடன் தகவல் தெரிவிக்கப்படும். அதை அறிந்து கொண்டு நாங்கள் வெளியே வருவோம். இருந்தாலும், அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற பயம் இருந்து கொண்டே தான் இருந்தது. இதுவரை பல முறை ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியிருந்தாலும் யாரும் இஸ்ரேலுக்குள் நுழைந்தது இல்லை.
ஆனால் ஹமாஸ் படையினர் உள்ளே வந்ததால் தான் நிறைய பாதிப்பும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. மேலும், ஹஸ்புல்லா பயங்கரவாத குழுவும் உள்ளே வந்தால் நிலைமை இன்னும் சிக்கலாகும் என்று கருதப்படுகிறது. அங்குள்ள மக்களுக்கு இது சாதாரணமாக இருந்தது. ஆனால், பழக்கம் இல்லாத எங்களைப் போல் வெளிநாட்டவர்களுக்கு பயம் இருந்தது தான். இதுவரை தண்ணீர், மின்சாரம் எதையும் தடை செய்யவில்லை. ஆனால், கூடிய விரைவில் தடை செய்யப்படலாம் என்று கூறியிருக்கிறார்கள்” என்று கூறினார்.