ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்தே சீனாவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் சீனா தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்குப் பாதுகாப்பு செயற்குழு ஒன்றை அமைத்த ஜோ பைடன், சீன அதிபரோடு தொலைபேசியில் உரையாடினார். அந்த உரையாடலின்போது, சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைகள், ஹாங்காங் ஒடுக்குமுறை, சின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்கள், தைவான் பிரச்சனை உள்ளிட்டவை குறித்த தனது கவலையை ஜோ பைடன் தெரிவித்தார்.
இந்த நிலையில், மனித உரிமை மீறல்களுக்காக சீனா எதிர்விளைவுகளைச் சந்திக்கும் என ஜோ பைடன் தற்போது எச்சரித்துள்ளார். ஊடகம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் பேசிய பைடன், "நாம் அனைவரும் மனித உரிமைகளுக்காக நிற்க வேண்டும்" எனத் தெரிவித்தார். மேலும் அவர், "நான் என்ன செய்கிறேனென்றால், ஐ.நா மற்றும் ஏனைய மனித உரிமை அமைப்புகளில், அமெரிக்கா மனித உரிமைகளுக்கான குரலாக தொடர்ந்து ஒலிக்கும் என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்" எனக் கூறினார்.
அப்போது மனித உரிமை மீறல்களுக்காக சீனா பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பைடன், "எதிர்விளைவுகளைச் சந்திக்கும். அது அவர்களுக்கும் தெரியும்" எனக் கூறியுள்ளார்.