இலங்கையில் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி கலைக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடத்தப்படும் என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இலங்கையில் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியதால் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்நாட்டில் கரோனா தாக்கம் குறைந்து இயல்புநிலை திரும்பி வருவதால், ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமூக இடைவெளியைப் பின்பற்றி புதிய வழிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.