சிங்கப்பூரில் இருந்து இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அங்கு போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்தன. குறிப்பாக, இலங்கை அதிபர் மாளிகையைச் சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். உளவுத்துறையின் தகவலையடுத்து, அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அவருக்கான விசா காலத்தை அந்நாட்டு அரசு நீட்டித்த நிலையில், தற்போது விசா காலம் முடிந்ததால், விமானம் மூலம் தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்கே, பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்நாட்டில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது.