உலகம் முழுவதும் மொத்தம் 30 மில்லியன் நபர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியில் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும் அப்போது ஹாக் செய்யப்பட்டிருந்த ஃபேஸ்புக் கணக்குகள் அனைத்தும் நிதி சம்பந்தமாகதான் செய்யப்பட்டிருக்கிறது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் தற்போது மில்லியன் கணக்கான ஃபேஸ்புக் பயனர்களின் பாஸ்வேர்ட்கள் அந்நிறுவனத்தில் பணியாற்றும் 20,000 ஊழியர்களால் மிகச் சுலபமாக அணுகும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு குறைப்பாட்டை, பாதுகாப்பு வல்லுநர் பிரையன் கிரெப்ஸ்தான் முதலில் சுட்டிக்காட்டினார். ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் 600 மில்லியன் பயனர்களின் லாகின் பாஸ்வேர்ட்கள் வெறும் சாதாரண எழுத்து வடிவில் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது கடந்த 2012-ம் ஆண்டு முதல் நடந்த்துவந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்குள்ளான நெட்வர்க்கில் பாஸ்வோர்ட்கள் குறித்த கோளாறு இருந்தது. ஆனால் தற்போது அது சரி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளது.