நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து கோட்டை மைதானம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.
இந்த தேர்தலில் தேர்தல் தேதிகள் அறிவித்து விட்ட பிறகும் கூட்டணி குறித்த குழப்பங்கள் சில அரசியல் கட்சிகளில் நிலவியது. பாஜக கூட்டணியில் இடம் பிடித்திருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அண்மையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சைக்கிள் சின்னத்திற்கு பதிலாக கை சின்னத்திற்கு வாக்கு கேட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.
அதேபோல தற்போது ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பலாப்பழம் சின்னத்திற்கு பதிலாக பழக்கதோஷத்தில் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 'இரட்டை இலைக்கு' என சொல்ல வந்த ஓபிஎஸ், உடனடியாக திருத்திக் கொண்டு பலாப்பழம் என்றார். ஏற்கனவே ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் ஐந்து பேர் ஓபிஎஸ் என்ற பெயரில் போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.