இலங்கை தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்: ம.தி.மு.க. அறிவிப்பு
ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைமையகத்தில் வைகோ மீது சிலர் தாக்குதல் நடத்த சிங்களர்கள் முயன்றதை கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக அறிவித்துள்ளது.
மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில், மனித உரிமை ஆணையத்தின் 36 ஆவது அமர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் பங்கேற்று ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலை ஒலிப்பதற்காக மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ செப்டம்பர் 17 ஆம் தேதி ஜெனிவா சென்றடைந்தார். செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று, ஈழத்தமிழர்கள் ஜெனிவாவில் நடத்திய பிரம்மாண்டமான பேரணியில் வைகோ உரையாற்றினார்.
செப்டம்பர் 25 ஆம் தேதி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முதன்மை அரங்கில் நடந்த கூட்டத்தில் வைகோ அவர்கள் இருமுறை உரையாற்றிவிட்டு வந்த நேரத்தில் சிங்களவர்கள் ஆறேழு பேர் வைகோ அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். அதில் ஒரு சிங்களப் பெண்மணி இலங்கைப் பிரஜை அல்லாத நீ எப்படி இலங்கையைப் பற்றிப் பேசலாம்? என்று கேட்டார். எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள்கொடி இரத்த உறவு இருக்கிறது. எனக்கு பேச உரிமை இருக்கிறது என்று பதிலடி கொடுத்த வைகோவை சிங்களர்கள் பலர் சூழ்ந்து கொண்டு தாக்க முயற்சித்து உள்ளனர்.
பன்னாட்டு அரங்குகளில் ஈழத்தமிழர்களின் குரலை எழுப்ப முடியாமல் ஒடுக்கி விடலாம் என்று எக்காளமிட்ட சிங்கள அரசு, வைகோ ஐ.நா.வில் ஈழத்தின் குரலை ஓங்கி ஒலிப்பதை தாங்க முடியாமல் ஆத்திரப்பட்டு, வைகோ மீது தாக்குதல் நடத்த கைக்கூலிகளை ஏவி விட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்திலேயே நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஐ.நா. மன்றத்துக்கு விடுக்கப்பட்ட அறைகூவல் ஆகும். இலங்கை இனவெறி அரசுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈழத்தமிழர்களின் நீதிக்காக அரசியல் சுயநிர்ணய உரிமைக்காக ஐ.நா. மன்றத்தில் உரிமை முழக்கமிடும் வைகோ அவர்களின் முழு பாதுகாப்பை ஐ.நா. மனித உரிமை ஆணையம் உறுதிசெய்ய வேண்டும். இந்தியாவின் குடிமகன், நாடாளுமன்றத்தில் 24 ஆண்டு காலம் உறுப்பினராக பணியாற்றிய வைகோ அவர்கள் மீது நடந்த தாக்குதல் முயற்சியை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைமையகத்தில் வைகோ அவர்கள் மீது தாக்குதல் நடத்த கைக்கூலிகளை ஏவிவிட்ட சிங்கள அரசைக் கண்டித்து செப்டம்பர் 27 நண்பகல் 11 மணிக்கு சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு கூறியுள்ளார்.