இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
இதனையடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நேற்று (24-11-23) முதல் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், எகிப்தின் ரபா எல்லை பகுதியில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 13 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் பிரதமர்கள் கூட்டாக சேர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எகிப்தின் ரபா எல்லை பகுதியில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ ஆகியோர் கூட்டாக சேர்ந்து நேற்று (24-11-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பேசியதாவது, “சர்வதேச சமூகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என அனைவரும் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான நேரம் வந்துள்ளது. ஐரோப்பியா அது போன்று இணையவில்லை என்றால், ஸ்பெயின் தனது சொந்த முடிவை எடுக்கும்” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து, பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ பேசியதாவது, “பிணைய கைதிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே முன்னுரிமையாக இருக்க வேண்டும். அதன்படி, உதவி பொருட்கள் காசாவுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் கொல்லப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும். இதில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். காசாவை அழிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு சமூகம் அழிக்கப்படுகிறது என்பதனையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்பாவி மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயல் ஏற்க முடியாதது. அதனால், நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும்” என்று கூறினார்.