சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஏ.பி. ராமன்(90) நேற்று இரவு காலமானார்.
1932ல் தமிழகத்தின் கும்பகோணத்தில் பிறந்த ராமன், 1960களில் சிங்கப்பூரில் குடியேறினார். அங்கு உள்ள ஆர்.டி.எஸ். ஒலிபரப்புச் சேவையில் அப்போது அவர் செய்தித் தொகுப்பாளராகப் பணியாற்றினார். மேலும், இவர் நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். சிங்கப்பூரில் இயங்கிவரும் தமிழ் பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரைகளை எழுதிய ராமன், புதுயுகம் வார இதழ், கலைமலர் மாத இதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர்.
கடந்த சில காலமாக உடல் நலம் குன்றியிருந்த ராமன், நேற்று இரவு பீஷானில் உள்ள அவருடைய இல்லத்தில் இயற்கை எய்தினார். இவரின் மறைவு, சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எழுத்தாளர் ராமனுடன் நெருங்கிப் பழகிய நக்கீரன் ஆசிரியர், அவரது மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.