பிறக்கும் போதே கரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்துள்ள குழந்தை சிங்கப்பூர் மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரத்தில் முதன்முறையாகக் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் ஆறு கோடிக்கும் அதிகமானோரைப் பாதித்துள்ளது, 14 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இதற்குத் தடுப்பு மருந்து கண்டறிவதற்கான ஆராய்ச்சி பணிகளை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சிங்கப்பூரில் பிறந்த குழந்தை ஒற்றிற்கு இயற்கையிலேயே கரோனா எதிர்ப்பாற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த 31 வயதான செலின் ஜான், கடந்த மார்ச் மாதம் குடும்பத்துடன் ஐரோப்பாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அங்கிருந்து நாடு திரும்பிய இவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. கருவுற்று 10 வாரங்கள் ஆகியிருந்த செலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இதில், அவர் கரோனாவில் இருந்து குணமாகிய நிலையில், சில நாள்களுக்கு முன் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு கரோனா பரிசோதனை நடத்தியதில், குழந்தையின் உடலில் கரோனா வைரஸுக்கான எதிர்ப்பு சக்தி இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். செலினிடமிருந்து நோய் எதிர்ப்பாற்றல் குழந்தைக்குச் சென்றிருக்கும் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர். கரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண்களிடம் இருந்து பிரசவிக்கும் குழந்தைகளுக்கு கரோனா ஆன்டிபாடிகள் கடத்தப்படலாம் என ஏற்கனவே ஆராய்ச்சிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.