ஐரோப்பிய ஒன்றியம், தங்களது கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு வருவதற்கும், ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலிருந்து இன்னொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்குச் செல்வதற்கும் வசதியாக ஜூலை 1 முதல் 'கிரீன் பாஸ்' என்ற அனுமதிச் சீட்டு நடைமுறையைச் செயல்படுத்தவுள்ளது. இதனைப் பெறுவதற்கான நடைமுறையில், ஐரோப்பிய மருந்துகள் முகமையின் ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே கிரீன் பாஸ் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மருந்துகள் முகமை இதுவரை வேக்ஸேவ்ரியா, அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. இதனால் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்படும் என தகவல் வெளியானது.
இதனையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்த விவகாரத்தை ஐரோப்பிய ஒன்றிய உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றார். மேலும் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை நீங்கள் அனுமதிக்காவிட்டால், அங்கிருந்து வருபவர்களின் தடுப்பூசி சான்றிதல்களை தாங்களும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனவும், அங்கிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் மத்திய அரசு கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா, கிரீஸ், அயர்லாந்து, ஸ்பெயின், எஸ்டோனியா ஆகிய நாடுகள், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு எந்த வித கட்டுப்பாடுமின்றி தங்கள் நாட்டிற்குள் வர அனுமதியளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சுவிட்சர்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளும், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை கட்டுப்பாடுகள் ஏதுமின்றி தங்கள் நாடுகளுக்கு அனுமதியளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.