தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகம், கற்பனைகளைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக தற்போது நடைமுறையில் இருக்கும் ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் அதீத வளர்ச்சியை நோக்கி உலகம் நகர்ந்துகொண்டிருக்கிறது.
இந்த ஏ.ஐ. தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியமானது தானியங்கி கார்கள். சில முன்னணி நிறுவனங்களான டெஸ்லா, கூகுள் மற்றும் உபேர் ஆகியவை தானியங்கி கார்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன.
சில நிறுவனங்கள் சோதனை ஓட்டத்திலும் ஈடுபட்டுவருகிறது. ஆனால், எந்த நிறுவனமும் இதுவரை சோதனையில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தானியங்கி கார்கள் சோதனையில் தோற்பதற்கு முக்கியக் காரணம் சாலையில் முன்னே செல்லும் கார் அல்லது ஏதாவது தடுப்பில் மோதி விபத்தை ஏற்படுத்திவிடுகிறது.
இந்த நிலையில் ஜார்ஜியா தொழில்நுட்ப கல்லூரி இது தொடர்பாக ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் தானியங்கி கார்களால் அடர்நிறத்தில் (கருப்பு) இருப்பவர்களை கண்டறிய முடியாமல் திணறுகிறது எனத் தெரியவந்துள்ளது.
அதேசமயம் அந்த கல்லூரி இது தொடர்பாக விளக்கம் அளிக்கம்போது, இந்த ஆராய்ச்சி தானியங்கி கார் தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தும் தரவுகளைக்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. நிறுவனங்கள் அதன் தரவுகளை பொது பயன்பாட்டிற்கும் தராது. மாறாக நாங்கள் கல்வி நிறுவனங்களின் ஆய்வுக்காக கொடுக்கப்படும் பொதுவான தரவுகளைக் கொண்டே இந்த ஆய்வை மேற்கொண்டோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவும் தானியங்கி கார்களின் சோதனை ஓட்டத்தில் வெற்றிபெறாமல் இருக்க காரணமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.