ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கிருந்த சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
ஜெர்மனி, பெர்லின் நகரில் ஹெய்டேஸ்ராஸ்ஸி பகுதியில் கட்டுமானப் பணியாளர்கள் பள்ளம்தோண்டிய பொழுது வெடிகுண்டு ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த வெடிகுண்டானது 1944 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கும், பிரிட்டனுக்கும் நடந்த இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டனால் வீசப்பட்ட குண்டாகும். இந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ய வெடிகுண்டு நிபுணர்கள் வரவைக்கப்பட்டனர். இந்த வெடிகுண்டின் எடை சுமார் 500 கிலோவாகும்.
இந்த வெடிகுண்டை செயலிழக்க செய்வதற்கு முன், அந்தப்பகுதியில் உள்ள நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம், ராணுவ மருத்துவமனை, பி.என்.டி உளவுத்துறை நிறுவனம் ஆகியவை மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் அந்தப்பகுதியை சுற்றி 800 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் இருந்த பத்தாயிரம் மக்கள் போலீசாரால் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் ஜெர்மனியில் இரண்டாயிரம் டன் வெடி மருந்துகளும், வெடி குண்டுகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டுகூட 'பிரிட்டன் ராயல் ஏர் போர்ஸால்' வீசப்பட்ட குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனை செயலிழக்க செய்வதற்காக அறுபதாயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.