இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 10 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது.
இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் அங்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணையக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் உயிரிழப்பதை விட அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு வந்துள்ள ஜெர்மனி அதிபர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்பொழுது, 'பொதுமக்களை தாக்குவது, மனிதர்களை கேடயங்களாக வைப்பது என ஹமாஸ் இரட்டைப் போர்க் குற்றம் புரிந்து வருகிறது. உலக நாடுகள் ஹமாஸ் அமைப்பிற்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்' என நெதன்யாகு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய ஜெர்மனி அதிபர் ஒலாஃப் ஸ்கோல்ஸ், 'காசா மக்கள் மனிதாபிமான உதவிகளை விரைவில் பெற வேண்டும்' எனத் தெரிவித்தார்.