அல்சீமர் எனப்படும் மறதி, சிந்திக்கும் திறனை இழத்தல், தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்குகளை குளோனிங் முறையில் தயாரித்துள்ளது சீனா. இந்த முறையில் தற்போது ஐந்து குரங்குகளை சீனா உருவாக்கியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள மூளை அறிவியல் மையத்தில் பிறந்துள்ள இந்த குரங்கு குட்டிகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, 'இதற்கு முன் நோய் ஆராய்ச்சிக்கு எலிகள் மற்றும் பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இவற்றின் மரபணு செயல்பாடுகள் மனித செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. இதனால் அந்த ஆராய்ச்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. அதனால் மனித மரபணு தன்மையுடன் ஒத்துள்ள குரங்குகள் மூலம் மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மனிதனுக்கான நோய்களை இந்த குரங்குகள் மூலம் ஆய்வு செய்வதோடு, அதற்காக உருவாக்கப்பட்ட மருந்துகளும் இந்த குரங்குகளிடம் பரிசோதிக்கப்படும். இதனால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விலங்குகளின் எண்ணிக்கை குறையும்' என கூறியுள்ளனர்.