ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும்போது, ஏதோவொரு புதிய விஷயத்தைக் காட்டவோ, பார்க்கவோ குழந்தைகள் ஆசைப்படுகின்றன. பிரிட்டனைச் சேர்ந்த ஒரு சிறுமி, தனது செயற்கைக் காலை அப்படிக் காட்ட, அதைப் பார்க்கும் சக தோழிகள் அசந்துபோய் நிற்கும் வீடியோ காட்சி இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.
குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் மைதானத்திற்குள், தன் செயற்கைக் காலின் உதவியுடன் நடந்து வருகிறாள் அனு (வயது 9) என்கிற சிறுமி. அவள் நடந்து வருவதைப் பார்த்த சக தோழிகள் கூட்டமாக ஓடிவந்து அவளை மொய்த்துக் கொள்கிறார்கள். ஒரு சிறுமி கால்களை விடாமல் பார்த்தபடியே நடக்கிறாள். ஒரு சிறுமியோ, இதுதான் உன்னுடைய புதிய காலா? என்று கேட்டபடி கட்டியணைக்கிறாள். ஒரு சிறுமி முத்தமிடுகிறார்கள். இதெல்லாம் நடந்து கொண்டிருக்க, அனு என்னால் இனி ஓட முடியுமே என்று சொல்வதைப் போல, குடுகுடுவென்று அங்கிருந்து ஓட, அவளை மற்ற சிறுமிகள் விரட்டி ஓடுகின்றனர். ஒரு கட்டத்தில் கால்களை வியந்து பார்த்த அந்த சிறுமி, அனுவின் கையைப் பிடித்து லெஃப்ட், ரைட் அணிவகுப்பு நடைபோடுகிறாள்.
இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் இந்த வீடியோ எடுக்கப்பட்டது 2017-ல். பிபிசி செய்தி நிறுவனம் படமாக்கிய இந்த வீடியோவில் இருக்கும் சிறுமி அனுவின் வலதுகால், பிறந்த சிறிது காலத்திலேயே துண்டாகிப் போனது. அதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட அனுவிற்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது. அதுவும் அவளுக்குப் பிடித்த அதே பின்க் நிறத்திலான கால்.
அனுவிற்கு இந்த செயற்கைக்கால் கிடைக்கக் காரணமான, பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் தேசிய சுகாதார சேவை நிறுவனம்.. அனுவைப் போலவே ஐநூறு குழந்தைகளுக்கு உதவியிருக்கிறது. “இந்த செயற்கைக் கால் தனக்குக் கிடைத்ததன் மூலம், நடக்க மட்டுமல்ல ஓடியாடி விளையாடவும் முடிகிறது. இனி மற்ற மாணவர்களைப் போல நானும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருப்பேன்” என்கிறார் அனு.
இந்த வீடியோ எதற்காக இப்போது வைரலாகிறது என்று தெரியவில்லை. ஆனால், அந்த வீடியோவில் இருக்கும் அழகியலையே அதனை ஷேர் செய்ய போதுமான காரணமாக எடுத்துக் கொள்ளலாம். திமுக எம்.பி. கனிமொழி இந்த வீடியோவை ஷேர் செய்து, “பெரியவர்களும், அரசாங்கங்களும் இவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார். உண்மைதான்... குழந்தைகளைப் பார்த்துதான் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் உலகம்தான் எத்தனை அழகானது!