‘ஈழத்தமிழர்களை காப்பாற்று’ என்று குரல் உயர்த்தி எழுந்த தமிழர்கள், அடுத்தடுத்து பறிக்கப்படும் தமிழர்களின் உரிமைகளுக்காக போராட்டக்களம் அமைத்துவிட்டனர். இந்தப் போராட்டம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகமெங்கும் நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் ஈழத்தமிழர் பிரச்சனையைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக கூடி போராடிய தமிழர்கள், அதைத் தொடர்ந்து கிடைத்த வெற்றியையும் கொண்டாடினார்கள். அடுத்து நெடுவாசல் காப்போம் என்று போராடினார்கள். இடையில் அமெரிக்காவை புரட்டிப்போட்ட புயலில் இருந்து மீட்புப்பணிகளுடன் அவர்களுக்கு தேவையான உணவு உடை கொடுத்தனர்.
தமிழகத்தில் வறட்சியால் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் விவசாயிகளின் கல்வி உதவிக்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் முன்வந்து உதவினர்.
இப்போது தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் பிரதான பிரச்சனைகளில் ஒன்றான ஸ்டெர்லைட் ஆலையை மூடு..! விவசாயிகளை வாழவிடு என்ற முழக்கத்துடன் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் டெக்சாஸ் மாநிலத்தில் இந்திய தூதரகம் முன்பு தங்கள் குழந்தைளுடன் ஏப்ரல் முதல் நாள் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே போல மினசோட்டாவிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாட்டுக்காக சேர்ந்த கூட்டம் தூத்துக்குடிக்காகவும் இப்போது சேர்ந்துவிட்டோம் என்று முழக்கமிட்டனர்.
அதேபோல இன்றும் இந்திய தூதரகம் முன்பு திரண்ட தமிழர்கள், தங்கள் குழந்தைகளுடன் ஸ்டெர்லைட்க்கு எதிரான பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விடுமுறை நாட்களை பொழுதுபோக்கிற்காக செலவிடாமல் தாய் மண்ணை காக்க செலவிடுகிறார்கள் இந்த உணர்வுள்ள தமிழர்கள். மேலும் அவர்கள் கூறும் போது,
அடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அமெரிக்காவில் போராட்டம் நடத்த தயாராகி வருகிறோம். கடல் கடந்து பிழைக்க வந்தாலும், தாய்மண்ணையும் தாய்நாட்டையும் மறக்கமாட்டோம். தாயகம் காப்போம். விவசாயம் காப்போம் என்கின்றனர் அமெரிக்கவாழ் தமிழர்கள்.