ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதற்கிடையே ஆப்கான் அதிபராகத் தன்னை அறிவித்துக்கொண்டுள்ள அம்ருல்லா சாலே, தலிபான் எதிர்ப்புக் குழு ஒன்றின் தலைவராக இருந்த அகமது ஷா மசூத்தின் மகனான அஹமத் மசூத்துடன் இணைந்து தலிபான்களுக்கு எதிராக ஒரு போராளி குழுவை உருவாக்கியுள்ளார். இந்த குழு, இதுவரை தலிபான்களால் கைப்பற்ற முடியாத பாஞ்ஷிர் பகுதியில் தற்போது உள்ளது. இதனையடுத்து நூற்றுக்கணக்கான தலிபான்கள், பாஞ்ஷிர் பகுதியைச் சுற்றி வளைத்தனர். இதனால் அங்கு மோதல் வெடிக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால் தலிபான்களும், தலிபான் எதிர்ப்புக்குழுவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
இந்நிலையில் ஊடகம் ஒன்றிடம் பேட்டியளித்த எதிர்ப்பு குழு உறுப்பினர், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும், இரு தரப்பும் இந்த பேச்சுவார்த்தையில் பேசப்பட்டது குறித்து தங்களது தலைமையிடம் விவாதித்துவிட்டு அடுத்தகட்ட பேச்சுவார்த்தையைத் தொடரலாம் என முடிவெடுத்ததாகவும், ஒருவரை ஒருவர் தாக்கக்கூடாது என முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த சூழலில் தலிபான்கள், பாஞ்ஷிர் பகுதில் இணைய சேவையையும், தொலைபேசி சேவையையும் முடக்கியுள்ளனர். இதனை எதிர்ப்பு குழு உறுதி செய்துள்ளது. அதேநேரத்தில் தலிபான்களின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அனாமுல்லா சமங்கனி, தலிபான்கள் பாஞ்ஷிருக்குள் எந்த வித எதிர்ப்பும் இன்றி நுழைந்து வருவதாக தெரிவித்தார். ஆனால், இதனை எதிர்ப்புக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, பாஞ்ஷிருக்குள் யாரும் நுழையவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அமெரிக்கா, காபூல் விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்த வந்த தீவிரவாதிகளின் கார் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தி அவர்களைக் கொன்றுள்ளது. அதேநேரத்தில் காபூல் விமான நிலையம் மீது பயங்கரவாதிகள் ஏவுகணை தாக்குதலை நடத்த முயன்றுள்ளனர். ஆனால், ஏவுகணை தடுப்பு அமைப்பு, ஏவுகணை தாக்குதலை முறியடித்துள்ளது. ஐஎஸ்-கோரசான் அமைப்பு இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பாஞ்ஷிர் விவகாரம், பயங்கரவாதிகளின் தாக்குதல் என ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் பரப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.