பிரதமர் மோடி, அரசு முறைப் பயணமாக ஜூன் 20 முதல் 25 ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில், அமெரிக்கா சென்ற மோடி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு பேசினார். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடியிடம் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த சப்ரினா சித்திக் என்ற பெண் நிருபர், ‘இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகள் குறித்தும் அவற்றை மேம்படுத்துவதற்கும் பேச்சுரிமையை நிலைநாட்டுவதற்கும் பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மோடி, ‘இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும் அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளில் தான் நாடு இயங்குகிறது’ என்றும் கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சியினர் மணிப்பூரில் கலவரம் நடந்து கொண்டிருக்கையில் இதுபோன்று மோடி பேசுகிறார் என்று விமர்சனம் செய்து வந்தனர். அதே வேளையில் பாஜகவைச் சேர்ந்த ஆதரவாளர்கள் அந்த பெண் நிருபரை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த பெண் நிருபர் ஒரு பாகிஸ்தான் இஸ்லாமியர் என்பதால் அவர் இதுபோன்ற கலவரத்தை தூண்டும் வகையில் கேள்வி கேட்டிருக்கிறார் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் அவரை டேக் செய்து கடுமையாகத் தாக்கி வருகின்றனர். இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையாக மாறி அமெரிக்கா வெள்ளை மாளிகை வரை சென்றுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில் அவர், ‘பெண் நிருபரான சப்ரினா சித்திக்கை அச்சுறுத்தும் வகையில் விமர்சனம் செய்த தகவலை நாங்கள் அறிந்தோம். மேலும் கேள்வி கேட்ட பத்திரிகை நிருபரை அச்சுறுத்துவது எந்த சூழ்நிலையிலும் நாங்கள் ஏற்க மாட்டோம். இது மிகவும் கண்டிக்கத்தக்க விசயம்’ எனக் கூறினார்.