தேனி மாவட்டத்திலுள்ள தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக்கு லண்டனில் சிலை வைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி அங்கு பென்னிகுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்துவைக்கிறார். இந்நிலையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் திடீரென காலமானார். இவரது மறைவையொட்டி அங்கு பத்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட உலகத் தலைவர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர்.
அதேசமயம், பென்னிகுக்கு சிலை திறக்க லண்டன் சென்றுள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, அங்கு அமைந்துள்ள திருவள்ளுவர் பள்ளியில், ராணி இரண்டாம் எலிசபெத் படத்திற்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் மற்றும் தேனி திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரும் அங்கு ராணி இரண்டாம் எலிசபெத் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.