ரஷ்ய அதிபர் பதவிக் காலத்திற்கான வரம்பை தளர்த்தும் புதிய சட்டத்திருத்தம் தொடர்பான பொது வாக்கெடுப்பு முடிவுகளில் ரஷ்ய மக்கள் புதினுக்கு பேராதரவு அளித்துள்ளனர்.
ரஷ்ய நாட்டின் சட்டப்படி, ஒருவர் தொடர்ந்து இருமுறைக்கு மேல் அந்நாட்டின் அதிபராகப் பதவிவகிக்க முடியாது. ஆனால் அந்நாட்டின் தற்போதைய அதிபர் புதின் 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அடுத்தடுத்த அதிபர் தேர்தல்களில் வெற்றிபெற்று அந்நாட்டின் அதிபராக இரண்டு முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், ரஷ்ய சட்ட அமைப்பின்படி, 2024 ஆம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் புதின் போட்டியிடமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
2008 வரை, இரண்டு முறை தொடர்ந்து அதிபராக இருந்த புதின், அதன் பின் பிரதமராகப் பதவி வகித்து, பின்னர் மறுபடி 2012 ஆம் ஆண்டு அதிபராகப் பதவியேற்றதைப் போலவே, தற்போதும் செய்ய நேரிடும் என்பதால், அதனைத் தவிர்ப்பதற்காக அண்மையில் சட்டத்திருத்தம் ஒன்றை ரஷ்ய அரசு கொண்டுவந்தது. கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட அந்த சட்டத்திருத்தத்தில், ரஷ்ய அதிபர் பதவிக் காலத்திற்கான வரம்பை தளர்த்துவது என முடிவெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, ரஷ்ய அரசியலமைப்பு நீதிமன்றமும், அதிபர் புதினும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த சட்டத்திருத்தம் குறித்துக் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி பொது வாக்கெடுப்பு நடத்த ரஷ்யா திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனா பரவல் காரணமாக அந்த பொது வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த வரம் இந்த பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மொத்தம் 67.97 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதில் 77.92 சதவீதம் பேர் புதின் அதிபராகத் தொடர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். 21.27% பேர் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். மக்களின் இந்த ஆதரவால் புதிய சட்டத்திருத்தம் அமலுக்கு வரும் நிலையில், 2036 வரை ரஷ்ய அதிபராக புதின் தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.