பெண் ஒருவரின் திருடப்பட்ட 'டெடி பியர்' பொம்மையைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் முதல் திரை பிரபலங்கள் வரை முயன்று வரும் நெகிழ்ச்சி சம்பவம் கனடாவில் நடந்துள்ளது.
கனடாவின் வான்கூவர் நகரில் வசித்துவரும் மரா என்ற 28 வயது பெண்ணின் தாய் மர்லின், கடந்த ஆண்டு புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 2017ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாக மராவுக்கு 'டெடி பியர்' பொம்மை ஒன்றை பரிசாக அளித்துள்ளார். குரல் பதிவு பொருத்தப்பட்ட அந்த பொம்மையில் பேசியிருந்த மர்லின், "உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்; உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்; எப்பொழுதும் நான் உன்னுடனேயே இருப்பேன்" எனக் கூறியிருந்தார். 2019 ஆம் ஆண்டு தனது தாயின் இறப்புக்கு பின்னர், அவரது நினைவாக அவரது குரல் பதிவு செய்யப்பட்ட அந்த பொம்மையை தன்னுடன் வைத்து வந்துள்ளார் மரா. இந்த சூழலில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஒரு புதிய அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அவர் குடிபெயர்ந்தபோது, அந்த பொம்மை திருடப்பட்டுள்ளது.
பல முக்கிய ஆவணங்களும், மின்னணு உபகரணங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் வைத்திருந்த பையில் அந்த பொம்மையை வைத்திருந்துள்ளார் மரா. புதிய வீட்டிற்கு மாறும்போது வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த அந்த பையை ஒரு நபர் எடுத்து சென்றுள்ளார். இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதையடுத்து, தனது தாயின் குரல் கொண்ட அந்த பொம்மையை எடுத்து சென்றவர், அதனை திருப்பி கொடுத்துவிடும்படி கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "அந்த பையைத் தொலைத்ததிலிருந்து என்மீது நானே கோபமாக இருக்கிறேன். இது முட்டாள்தனமாக தோன்றலாம். ஆனால் என்னுடைய தாயை நான் இன்னொரு முறை இழந்ததை போல உணர்கிறேன்" என தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோ கனடா முழுவதும் வைரலான நிலையில், அவரது பொம்மையை எடுத்தவர்கள் திருப்பி தரும்படி, பொதுமக்கள் இணையதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து, அந்நகரத்தில் முக்கிய வீதிகளில், பொம்மை குறித்த போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அதேபோல, உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும், இந்த பொம்மையைக் கண்டுபிடிப்போருக்கு பரிசுகள் தருவதாகவும் அறிவித்து வருகின்றனர். தனது தாயின் நினைவு பரிசுக்காக போராடும் மகளின் ஏக்கமும், அவருக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் அப்பகுதி மக்களின் மனிதமும் பல நாடுகளில் உள்ள மக்களையும் நெகிழ வைத்துள்ளது.