ரஷ்ய அதிபர் புதின், 'பார்கின்சன்' எனும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் எனத் தாவல்கள் வெளியான நிலையில், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசியல் விமர்சகர் வலேரி சோலோவி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் நீண்டகால அதிபரான புதினுக்கு பார்கின்சன் நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக ரஷ்யாவில் தகவல்கள் பரவி வரும் சூழலில், புதின் அடுத்த ஆண்டு பதவி விலகத் திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியானது. மாஸ்கோவைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் வலேரி சோலோவி 'தி சன்' பத்திரிகையிடம், "ரஷ்ய அதிபரின் மகள்கள் மற்றும் 37 வயது காதலி அலினா கபீவா ஆகியோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி புதின் பதவியை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளார்" என்று கூறினார். தனது குடும்பத்தினரின் ஆலோசனைகளைப் பெரிதும் மதிக்கக்கூடியவராகப் பார்க்கப்படும் புதின், தனது குடும்பத்தாரின் யோசனையை ஏற்றுப் பதவி விலக வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரஷ்யா தரப்பில் இந்தத் தகவல்கள் முற்றிலும் மறுக்கப்பட்டன. ஆனால், நிகழ்ச்சி ஒன்றில் புதின் பங்கேற்றபோது, அவருக்குப் பார்கின்சன் நோயின் அறிகுறிகள் தென்படுவதாக வீடியோக்கள் வெளியாகின. பின்னர் அந்தக் காணொளிகள் முழுவதையும் நீக்கிவிட்டு, எடிட் செய்யப்பட்ட புதிய வீடியோவை ரஷ்யா வெளியிட்டது.
இந்நிலையில், பத்திரிகை ஒன்றிடம் பேசியுள்ள வலேரி சோலோவி, புதினுக்கு புற்றுநோய் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள செய்தியில், "எனக்குக் கிடைத்த தகவல் உறுதியானவை. அவருக்கு இரண்டு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒன்று பார்கின்சன் எனப்படும் நரம்பியல் தன்மை கொண்டது, மற்றொன்று புற்றுநோய் பிரச்சனை. பார்க்கின்சன் நோய் புதினின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எனக் கூற முடியாது. ஆனால், நரம்பியல் மண்டலத்தைப் பாதித்துள்ள இந்த நோயால் புதின் தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வருகிறார். இதனால், பதவி விலகத் திட்டமிட்டிருக்கும் புதின், தனது இரண்டு மகள்களில் ஒருவரான கேடரினா டிகோனோவாவை அதிபராக்கவும் திட்டமிட்டு வருகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.