Skip to main content

அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை - இந்தியாவின் கோரிக்கைக்கு பிடி கொடுக்காத அமெரிக்கா!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

joe biden

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தீவிரமாக பரவி வரும் கரோனா இரண்டாவது அலையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறி வருகிறது. இந்தக் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. 

 

இருப்பினும் தடுப்பூசி தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. மூலப்பொருட்கள் போதிய அளவில் கிடைக்காததால், இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளிலும் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனவல்லா, மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

 

மேலும், சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருடன் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சுகாதாரத்துறையில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்ததாக கூறியிருந்தார். அந்த விவாதம் தடுப்பூசி தொடர்பானது என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்காவும் இதுகுறித்து ஆலோசிப்பதாகவும், இதற்கு சரியான தீர்வு காணப்படும் என்றும் சமீபத்தில் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தற்போது தடுப்பூசி விவகாரத்தில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

 

ad

 

தடுப்பூசி மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கான தடையை நீக்குவது சம்பந்தமான இந்தியாவின் கோரிக்கை மீது பைடன் நிர்வாகம் எப்போது முடிவெடுக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், "அமெரிக்கா முதன்மையாக அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் லட்சியத்தில் ஈடுபட்டுள்ளது. இதுவரை அது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. நாங்கள் இதனை சில காரணங்களுக்காக செய்கிறோம். முதலாவது, எங்களுக்கு அமெரிக்க மக்கள் மீது தனிப்பட்ட பொறுப்பு இருக்கிறது. இரண்டாவது, உலகிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்க மக்கள் மட்டும்தான். அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அமெரிக்க நலனுக்கானது மட்டுமல்ல; உலகின் நலனுக்கானது " என தெரிவித்துள்ளார்.

 

இதனால் மூலப்பொருட்கள் ஏற்றுமதி தடை தற்போது நீங்க வாய்பில்லை என தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்