கடும் பொருளாதார நெருக்கடியால் திவாலாகும் நிலையை நோக்கி நகரும் இலங்கை நாட்டில் நடப்பது என்ன? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்!
கரோனா நோய்த்தொற்றால் இலங்கையின் உற்பத்தி மற்றும் சேவை துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கான வரி வசூலும் சரிவைக் கண்டுள்ளது. நாட்டின் மொத்த ஜிடிபியில் 10% பிடிக்கும் சுற்றுலா துறையும் கரோனாவால் முடங்கியிருக்கிறது. இந்த நிலையில், இலங்கை அரசின் கடன் சுமையும், வட்டி சுமையும் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.
இலங்கை நாட்டின் மொத்த கடன் சுமை 7.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது என 'தி கார்டியன்' இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது இலங்கை ரூபாயில் கடன் மதிப்பு சுமார் 1.49 லட்சம் கோடி ஆக இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, அரசின் கையிருப்பில் இருக்கும் அந்நிய செலாவணியின் மதிப்போ வெறும் 32,472 கோடி தான் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் கையிருப்பு அந்நிய செலவாணியைவிடவும், கடன் சுமை அதிகமாக உள்ளது.
இயற்கை வளம் கொண்ட இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதே இல்லை. போதிய திட்டமிடல் இல்லாமல், அந்நாட்டு அரசு இயற்கை விவசாய கொள்கையை கையில் எடுத்தது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரசாயன உரங்களை இறக்குமதி செய்ய, அங்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் போதிய உரம் கிடைக்காமல் மகசூல் குறைந்திருப்பதாகத் தெரிகிறது.
நாட்டில் நெல் விளைச்சல் அதிகமாக உள்ள அம்பாறையை சேர்ந்த விவசாயிகள், போதிய உரம் இல்லாமல் பயிரிட்டதால், 35 முதல் 40 மூட்டை வரையில் நெல் விளைச்சல் இருந்த இடத்தில், 15 முதல் 20 மூட்டைகள் நெல் விளைச்சல் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கின்றன.
நாட்டிலிருக்கும் அந்நிய செலாவணியும் வெளியே சென்று விடக்கூடாது என்பதில், கவனமாக இருக்கும் இலங்கை அரசு, வெளிநாட்டில் இருந்து தானிய இறக்குமதியை நிறுத்தியிருக்கிறது. இவ்வாறு போதிய விளைச்சல் இல்லாமலும், இறக்குமதி இல்லாமலும் இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலைவாசி விண்ணை நோக்கி செல்கிறது.
இதனால், ஒரு பால் அல்லது டீ இலங்கை ரூபாய் மதிப்பில் 70 விற்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூபாய் 26 ஆகும். ஒரு கிலோ கேரட் 560 ரூபாய்க்கும், ஒரு கிலோ மிளகாய் 1,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் முறையே 205, 366 ஆகும்.
பொதுவாக ஒருநாடு தங்கம் கையிருப்பு அடிப்படையில், ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப்படுகிறது. ஆனால், நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் ரூபாய் நோட்டுகளையும், இலங்கை அரசு பிரிண்ட் செய்து வெளியிட்டுள்ளது. இதனால் பண வீக்கம் அதிகரித்து மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசு மீது குற்றம்சாட்டப்படுகிறது.
பால் முதல் எரிபொருள் வரை அனைத்தும் விலையேறியிருக்கும் நிலையில், வெறும் இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுவதாக இலங்கை மக்கள் கண்ணீர் மல்க கூறுகின்றன. இலங்கையில் ஏற்கனவே 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழ் சென்றுவிட்டதாக உலக வங்கி கணித்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசி சர்க்கரை மற்றும் தானியங்கள் பதுக்கி வைப்பதைத் தடுக்கவும் அரசு நிர்ணயம் செய்த விலையில், அவற்றை விற்பனை செய்யவும் ராணுவத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் இந்த நிலைக்கு சீனா தான் காரணம் என்று கூறுகின்றனர் வல்லுநர்கள்.
சீனாவுடன் நெருங்கிய உறவு காரணமாக, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளின் உதவிகள் இலங்கைக்கு இல்லாமல் போயுள்ளன என்று கூறுகின்றனர் வல்லுநர்கள்.
இதேநிலைமை இலங்கையில் நீடிக்கும் பட்சத்தில், அந்நாட்டு அரசு திவாலாகும் என்று எச்சரிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.