Skip to main content

“சிங்கள மக்களாலேயே ராஜபக்ச குடும்பம் விரட்டியடிக்கப்பட்டுள்ளது” -  ராமதாஸ் 

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

PMK Ramadoss comment on gotabaya rajapaksa

 

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறை, ராணுவம், பொதுப்போக்குவரத்து ஆகிய மூன்று துறைகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது. பொதுப்போக்குவரத்து தவிர எந்தவொரு தனியார் வாகனமும் இயங்காத சூழலில் உணவுப்பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ, மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கோ மிகப்பெரிய சிரமத்தை மக்கள் சந்தித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத இலங்கை அதிபர் கோத்தபய ராஜ்பக்சே பதவி விலக வலியுறுத்தி, இலங்கை முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், கிரிக்கெட் வீரர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவை உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர். அதிபர் மாளிகையின் நான்குபுறமும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளதை அறிந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பியோடிவிட்டார். 

 

இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “இலங்கையை திவாலாக்கிய ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றியுள்ளனர். மக்கள் சக்திக்கும், ஆத்திரத்திற்கும் அஞ்சி அதிபர் கோத்தபாய தப்பியோடியுள்ளார். இலங்கையில் ஊழலில் திளைத்த ராஜபக்ச குடும்பம் அதை மறைக்க தமிழர்களை இனப்படுகொலை செய்தது. அதற்காக கடன் வாங்கியது, இனப்படுகொலைக்கு உதவிய நாடுகள் இலங்கையை கொள்ளையடிக்க அனுமதித்தது ஆகியவை தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும்.

 

அந்த வகையில் இலங்கை பொருளாதார நெருக்கடியை ஈழத்தமிழர் இனப்படுகொலையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. எந்த சிங்கள மக்களை வெறியேற்றி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தமிழர்களை கொன்றார்களோ, அந்த சிங்கள மக்களாலேயே ராஜபக்ச குடும்பம் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களை ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியிருக்கிறது. ராஜபக்சேக்கள் அதிகாரத்திலிருந்து மட்டுமே அகற்றப்பட்டுள்ளனர். இனப்படுகொலைக்காக தண்டிக்கப்படவில்லை. இனப்படுகொலையாளிகள் தப்பிக்க உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது” என்று பதிவிட்டுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்