அமெரிக்காவில் கடந்த வருடம் நடந்த அதிபர் தேர்தலில், ஜோ பைடன் அமெரிக்க அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவரும் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். இதன்மூலம் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் பெண் துணை அதிபர், தெற்காசியாவைச் சார்ந்த முதல் துணை அதிபர் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளைப் பெற்றார் கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிஸின் சகோதரி மகள் மீனா ஹாரிஸ். அமெரிக்காவில் வசித்து வரும் இவர் வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும் உள்ளார். இவர் இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை மீனா ஹாரிஸிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, ‘துணை அதிபர் கமலா ஹாரிஸின் பெயரை, தனது பிரபலத்திற்காக பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. நடந்ததை மாற்ற முடியாது என்றாலும், தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள கமலா ஹாரிஸின் பெயரைப் பயன்படுத்தும் பழக்கத்தை மீனா ஹாரிஸ் மாற்றிக்கொள்ள வேண்டும் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ள’தாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.