பிரேசில் அதிபராக இருப்பவர் போல்சனேரோ. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனாத் தொற்றை, சிறிய அளவிலான ஃப்ளு காய்ச்சல் என கூறியிருந்தார். இந்தநிலையில், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும், நான் அந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல.' நீங்கள் ஒரு முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்சினை" என பைசர் ஒப்பந்தத்தில் தெளிவாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
மேலும், "நீங்கள் ஒரு சூப்பர் ஹியூமனாக மாறினால், ஒரு பெண் தாடியை வளர்க்கத் தொடங்கினால் அல்லது ஆண் குரலில் பேச ஆரம்பித்தால், அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது" என பைசர் நிறுவனத்தை போல்சனேரோ விமர்சித்துள்ளார்.
பிரேசிலில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியே சோதனை செய்யப்பட்டு வருகிறது. பிரேசில் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்கு பிறகு, இந்த தடுப்பூசிகள் யாருக்கெல்லாம் வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் கிடைக்கும். ஆனால் நான் அந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளமாட்டேன் என போல்சனேரோ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் உள்ளிட்ட மற்ற நாடுகளின் தலைவர்கள், தடுப்பூசியின் மேல் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமென்பதற்காக முதலில் தங்களுக்கு செலுத்திக்கொள்ளும் நிலையில், பிரேசில் போல்சனேரோ அதிபர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.