பெரு நாட்டில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய சீனர்களின் உடல்கள் கண்டெடுப்பு!
பெருநாட்டின் இன்கான் காலத்துப் பகுதியில், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய சீனர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தென் அமெரிக்க பகுதிகளுக்கு சீனாவிலிருந்து இடம்பெயர்ந்து, கொத்தடிமைகளாக சீனர்கள் வாழ்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்து வரும் சீனர்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த ரகசிய கல்லறைகள் பெரு நாட்டின் லிமா பகுதியில் உள்ளன. இவற்றில் ஆய்வு மேற்கொண்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அப்பகுதியில் புதைக்கப்பட்ட 16 சீனர்களின் உடலைக் கண்டுபிடித்துள்ளனர்.
முற்றிலும் அழுகிய நிலையில், எழும்புக்கூடுகளாக இருக்கும் அந்த உடல்களோடு அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், ஓபியம் குழாய்கள் மற்றும் உடைகளும் கிடைத்துள்ளன.
19-ஆம் நூற்றாண்டுகளின் இரண்டாம் பாதியில் பெரு நாட்டிற்கு கிட்டத்தட்ட 1,00,000 சீனர்கள் வேலை நிமித்தமாக இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் அங்கு விவசாயம், இருப்புப்பாதை மற்றும் பறவைகளின் எச்சத்தில் உரம் செய்யும் வேலைகள் உள்ளிட்டவற்றை செய்துள்ளனர்.
ரோமன் கத்தோலிக்க கல்லறைகள் உள்ள பகுதியில் இடம் கொடுக்காமல், இன்கான் காலத்து பகுதியில் உடல்களைப் புதைக்கச் செய்தது, பெரு நாட்டில் சீனர்களுக்கு மரணத்தில் கூட பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.
- ச.ப.மதிவாணன்