இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த பொதுமக்கள் பலரையும் ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் கடுமையான பதிலடிகளை இஸ்ரேல் தரப்பு கொடுத்து வருகிறது. மேலும், காசாவிற்கு கொடுக்கும் பதிலடி ஹமாஸ் அமைப்பிற்கு மட்டுமல்ல, நமது எதிரிகள் கூட மறக்க முடியாத நினைவாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் இருக்கும் கட்டடங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. நேற்று நடைபெற்ற தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் உயிரிழப்பதை விட அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் குழு இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்குப் பாலஸ்தீன அரசு அழைப்பு விடுத்துள்ளது. அப்பாவி பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் மனித உரிமை அமைப்புகள் சர்வதேச நாடுகளும் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும். காசா நகரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாலஸ்தீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பாலஸ்தீன மற்றும் தூதரக ஊழியர்கள் விடுமுறை எடுத்திருந்தாலும் ரத்து செய்யப்பட்டு, 24 மணிநேரமும் பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு காசா பகுதியில் இருக்கும் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவத்தால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதனை செல்போனில் ஆவணப்படுத்தி வையுங்கள்; மனித உரிமை மீறல்களை உலகிற்குக் காட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.